திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (36). இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான்சி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் நடந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு வந்து அங்கேயே ஹோட்டல் வைத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
தற்போது, இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ள நிலையில், சிவபிரசாத் கஞ்சா போதைக்கு அடிமையாகி தினமும் கஞ்சா போதையில் ஜான்சியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், சிவபிரசாத்தின் தொந்தரவு தாங்காமல் ஜான்சி கணவர் சிவபிரசாத் மீது திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில், இருவரையும் அழைத்து வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், ஏலகிரி மலையிலிருந்து ஜோலார்பேட்டை அடுத்த இடையப்பட்டி பகுதிக்கு கடந்த மே மாதம் குடிபெயர்ந்து வந்துள்ளனர். இருந்த போதிலும், சிவபிரசாத் கஞ்சா பயன்படுத்துவதை நிறுத்தாமல் வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடிகளை நட்டு வைத்து அவ்வப்போது அவருக்கு தேவைப்படும் நேரத்தில் கஞ்சாவைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.