சென்னை: சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட வாகனம் நிறுத்தும் இடத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே நிறைய வசதிகள் உள்ளன. புதிதாக வாகன நிறுத்துமிடம் புணரமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 300க்கும் மேற்பட்டோர் புகார் அளிக்க வருகிறார்கள்.
உயர் அதிகாரிகளை நேரில் சந்திக்க வருகிறார்கள். புதன்கிழமை தோறும் காவல் ஆணையர் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து புகார் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய குற்றவியல் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து மூன்று மாத காலமாக புதிய குற்றவியல் சட்டத்திற்கு டிஜிபி அலுவலகத்தில் பயிற்சி நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இரண்டு, மூன்று முறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு காவலர்களுக்கு 100 சதவீதம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பணிபுரியும் விசாரணை அதிகாரிகளுக்கு 100 சதவீதம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை இது தொடர்பான எந்த பிரச்னையும் இல்லை. என்னுடைய சொந்த அனுபவத்தில் கூறுகிறேன். சில சட்டங்கள், பழைய சட்டங்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்ததும் தற்போது இருப்பதும் ஒன்றுதான். அதிகாரிகளும் பெரிய அளவு அதில் பாதிப்பு இல்லை என்று தான் கூறுகிறார்கள்.
சென்னை பெருநகர காவல் நிலையத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் 12 காவல் மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனைத்திலுமே சைபர் கிரைம் குற்றப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.