சென்னை:ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் ஜெயா நகர் நரிக்குறவர் காலணி அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகே உள்ள இடத்தில் ராஜேஸ்வரி என்பவர் அவருக்குச் சொந்தமான நிலத்தில் நீதிமன்ற ஆணை உள்ளதாகக் கூறி, ஒரு பகுதியில் காவல்துறை பாதுகாப்புடன் சுற்றுச்சுவர் எழுப்பி வந்துள்ளார்.
இதனால் அங்கு வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற நரிக்குறவர் இன மக்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, திருமுல்லைவாயலில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இது தொடர்பான சில வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், காவல் துறையினர் - நரிக்குறவர் மக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. தொடர்ந்து ஆங்கிலத்தில் உள்ள நீதிமன்ற ஆணையை நரிக்குறவ மக்களிடம் கொடுத்து படிக்கச் சொல்வதும், படித்துக் காண்பிக்கும் போது அவர்கள் திணறுவதும், அதேபோல் கைது செய்யும்போது வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.