திருநெல்வேலி: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நேற்று நள்ளிரவில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன், ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 08) புதன்கிழமை நள்ளிரவு, நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் அழைத்து, ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின்பேரில், காவல் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, நேற்று நள்ளிரவு வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் 10-க்கும் மேற்பட்டோர், மோப்பநாய் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்தில், பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களில் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், இது வெறும் புரளி என்று தெரியவந்தது.