சென்னை:அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு தமிழக முழுவதும் இன்று (பிப்.18) சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ் கூறுகையில், “அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஜனவரி நாலாம் தேதி கல்லூரி வாயில்களில் முழக்கப் போராட்டமும் மாநிலம் தழுவி அளவில் ஜனவரி 30 ஆம் தேதி கல்லூரி இயக்குநர் அலுவலகத்தில் போராட்டமும் நடத்தினோம்.
ஆனால், கோரிக்கைகள் எதையும் அரசு செவிசாய்க்காமல் உள்ளது. எனவே சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று மாபெரும் மறியல் போராட்டத்தினை உதவிப்பெறும் கல்லூரி ஆசிரியர்கள் நடத்தி வருகின்றோம். மேலும், எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத நிலையில் வரும் 23ஆம் தேதி முதல் இணை இயக்குநர் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளோம்.