சேலம்: டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் தனிப்படை போலீசார் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு அவர்கள் சென்று பார்த்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் ஆகிய போதை பொருட்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் பெங்களூரு பகுதியில் இருந்து போதை பொருட்களை இங்கு கொண்டு வந்து, பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில், இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார் பெங்களூருக்கு சென்று போதை பவுடரை விற்பனை செய்யும் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது போலீசார் தேடுவதை அறிந்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பி மீண்டும் சேலத்திற்கு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் மீண்டும் சேலம் வந்து விசாரித்தனர்.