கோயம்புத்தூர்:கடந்த ஜனவரி 29ஆம் தேதி முத்து என்ற நபர், Myv3 Ads நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், Myv3 Ads நிறுவனமானது மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்றி, பெரும் தொகையை வசூலித்து வருவதாகவும், ஆகையால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, My v3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, கடந்த ஜன.30ஆம் தேதி இருகூர் வி.ஏ.ஓ ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், சட்டவிரோதமான கூட்டத்தில் ஒன்றுசேர ஆட்களைச் சேர்த்தல், முறையற்ற தடுப்பு, பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், கடந்த ஜன.31ஆம் தேதி பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து பல தரப்புகளிலிருந்து புகார்கள் வந்தது. இதனிடையே, Myv3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த், நிறுவனம் நடத்தி வருவதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது என்றும், எந்த அதிகாரிகளுக்கும் காண்பிக்க நான் தயாராக இருப்பதாகவும், போலியான புகாரை அளித்துள்ளதாகவும், MyV3 Ads நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.
பின்னர், கடந்த பிப்.5ஆம் தேதி MyV3 Ads நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள், இந்நிறுவனம் ஆயிரக்கணக்கானோரிடம், கோடிக்கணக்கில் மோசடி செய்ததுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, வழக்கில் தீவிரம் காட்டிய போலீசார், விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.