திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (40). இவரது மனைவி ஷியாமளா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதமாக தனித்தனியே வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உறவினர்கள் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயபிரகாஷ் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால், அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குக்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஜெயபிரகாஷ் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் பெரிய பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரிய பாளையம் போலீசார், இறந்து கிடந்த ஜெயபிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பெரிய பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக யாரேனும் திட்டமிட்டு ஜெயபிரகாஷை அடித்துக் கொலை செய்தனரா அல்லது வீட்டிற்குள் பொருட்களைத் திருட வந்தபோது ஏற்பட்ட மோதலில் மர்ம நபரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:"கூவம் நதி நர்மதை நதிக்கரை போல் மாற்றப்படும்" - மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வாக்குறுதி! - Lok Sabha Election 2024