சென்னை: இந்தியா முழுவதும் நாளை (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. மக்கள் வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடும் நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிலையில் பொது இடத்தில் வைக்கப்படும் சிலைகளுக்கு காவல்துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி ரசாயன கலவை இல்லாத சிலைகளை வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை வைக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.
இந்நிலையில், காவல்துறை விதித்திருக்கும் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் தெரிவிக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1,519 சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னை பெருநகரில், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடுகள் செய்வதற்கும் பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கும் உயர்நீதிமன்றம், மாசுக் கட்டுப்பாடு வாரியம், தீயணைப்புத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியினரின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளை நிறுவ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அருண் உத்தரவிட்டுள்ளார்.