JAGUAR MOVEMENT IN MAYILADUTHURAI மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதை பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்த சிலர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்த செய்தி காட்டுத் தீ போல் பரவியதால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் அளித்ததன் பெயரில் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையின் கால் தடத்தை உறுதி செய்தனர். அதன் பின், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது சிறுத்தை நடமாடியது தெரியவந்தது.
நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய மயிலாடுதுறை மையப்பகுதியில் சிறுத்தை சுற்றி வருவது அனைவரிடமும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஏதேனும் விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே உறைந்து உள்ளனர்.
இதையும் படிங்க:தறியில் நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபு! - MAYILADUthURAI AIADMK CANDIDATE