தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் சதய விழா நேற்று முன்தினம் (நவ.9) மற்றும் நேற்று (நவ.10) என இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று நடந்த நிறைவு விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு ராஜராஜன் விருது, தேவார நாயகம் விருது ஆகியவற்றை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து கூறுகையில், "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சை பெருவுடையார் கோயில் என்று இந்த கோயில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த பிரமாண்ட கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜனுக்கு எப்போதும் தமிழர்களின் வரலாற்றில் தனி இடம் உண்டு.
இதையும் படிங்க: ஐடி ஊழியர் டூ விவசாயி.. தஞ்சையை கலக்கும் விக்னேஸ்வரன்!
ஆனால், அந்த மன்னனின் சிலையை கோயிலுக்கு வெளியே வைத்துள்ளனர். அதைக் காணும் போதெல்லாம் தமிழ் நெஞ்சங்களில் குருதி கசிகிறது. ஏனென்றால், இந்த ஆலயத்திற்கு மூலமே ராஜராஜ சோழ மன்னன் தான். கல் இல்லாத இந்த மாவட்டத்திற்கு குண்ணாண்டார் கோயிலில் இருந்து கல் கொண்டு வந்து, இரண்டு லட்சம் டன் கற்களை கொண்டு இக்கோயிலைக் கட்டினார். அப்படியிருக்க, அவரது சிலையை ஏன் கோயில் வளாகத்தில் நிறுவக் கூடாது என்பது தான் எனது கேள்வி.
கவிஞர் வைரமுத்து பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) அவன் மனிதன் என்பதால், கோயில் வளாகத்தில் மனித சிலையை வைக்கக் கூடாது என்று ஆகம விதிகள் சொல்வதாக சில பேர் கருதலாம். சில பேர் கருதுகிறார்களோ.. இல்லையோ. ஒன்றிய அரசின் தொல்லியல் துறை அப்படிக் கருதுமோ.. என்னவோ தெரியவில்லை. அவர்களுக்கு நான் ஒரு குறிப்பைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மாமன்னன் ராஜராஜன் இந்த ஆலயத்தைக் கட்டிய போது தேவாரம் பாடிய மூவராகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் சிலைகளையும் செப்புத் திருமேனிகளாக இந்த ஆலயத்தில் வைத்து மனிதர்களை மனிதர்களால் வணங்கச் செய்தான். அப்படி மனிதராகிய தேவாரம் பாடிய மூவரை இந்த கோயிலுக்குள் வைத்து வணங்குவதற்கு ஆகம விதி அனுமதிக்கும்போது. ராஜராஜ மாமன்னன் என்ற மனிதன் சிலையை வளாகத்தில் வைப்பதை எது தடுக்கிறது. விரைவில் மன்னன் ராஜராஜன் சிலை ஆலய வளாகத்திற்குள் நிறுவப்பட வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.