திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தனிப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் ராஜகோபால். இவர், அப்பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்து மாணவின் பெற்றோர் அதிர்ச்சிடைந்துள்ளனர். பின்னர், இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காவலர் ராஜகோபால் மீது புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மாரியம்மாள், தனிப்படை காவலர் ராஜகோபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு (எப்ஐஆர் எண் - 1624) செய்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், துறைரீதியான விசாரணையின் அடிப்படையில், தனிப்படை காவலர் ராஜகோபாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டார்.
மேலும், தலைமறைவாகியுள்ள காவலர் ராஜகோபாலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலரே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், காவலர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"400 இடங்களைப் பிடித்து ஆட்சியமைப்போம்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை! - Lok Sabha Election 2024