திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க மாநிலத் தலைவருமான டி.கே.ராஜாவின் மகன் ஞானகுருவின் திருமண விழாவில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தனியார் விடுதி ஒன்றில் வைத்து, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளார்கள். மக்களுடைய முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரம், மக்கள் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களித்தார்கள், வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கவில்லை. காமராஜர் மற்றும் அண்ணா போன்றவர்களில் காலத்தில் நல்ல நேர்மையான, உண்மையான வேட்பாளர்களை நிறுத்தப்பட்டனர். அந்த நம்பிக்கையில் மக்கள் அப்போது மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களித்தனர்.
ஆனால், அதன் பின்னர் உள்ள வேட்பாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், இன்னும் பலர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகவும் உள்ளனர். இத்தகைய வேட்பாளர்களுக்கு தமிழக மக்கள் வெற்றி அளித்துள்ளது வேதனை அளிக்கிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசு ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் சாதனைகள் என்று சொன்னால் எதுவும் இல்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பத்து சதவீதம் மட்டுமே செய்துள்ளனர். குறிப்பாக, சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.