தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக வாக்குக்காக தரும் பணம் சாராயம் விற்பனை மூலம் கிடைத்தது" - விக்கிரவாண்டியில் அன்புமணி ராமதாஸ் தாக்கு! - VIKRAVANDI BY ELECTION

VIKRAVANDI BY ELECTION: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியவாறு இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 9:13 PM IST

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்:விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுதினம் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது ஜூலை 13ஆம் தேதி நடைபெற்று, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் சி அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா மற்றும் சுயேட்சையாக 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் பரபரப்பாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வந்த நிலையில், பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கெடார் பேருந்து நிலையம் அருகே இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தில் பாமக தொண்டர்கள் சமூக நீதி துரோகி திமுக, போதைப் பொருள் திமுக, மனித பட்டி திமுக, டோக்கன் திமுக, கள்ளச்சாரய திமுக, ஜனநாயக படுகொலை திமுக,பட்டபகலில் படுகொலை திமுக போன்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு கெடார் பேருந்து நிலையத்திலிருந்து, சிறுது தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அதில் பேசிய அன்புமணி, “இந்த தேர்தல் பாமகவிற்கும், விக்கரவாண்டி தொகுதிக்கும் மிக முக்கியமானது, ஏன்னென்றால் திமுகவிற்கு இது பத்தோடு பதினொன்றாவது தேர்தல். ஆனால் உங்களுக்கு, இது பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்புகள் போன்ற முக்கிய தேவைக்களை தரபோகும் தேர்தல்.

திமுகவினர் பணத்தால் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என ஆணவத்தில் இருக்கின்றனர்.அவர்கள் தரும் பணம் அனைத்தும் கள்ளசாராயம், மது பானம் விற்பனையினால் வரப்பட்டவை. இந்த தேர்தலுக்காக திமுக 150 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

திமுக வேட்பாளர்களிடம் மது விலக்கு குறித்து கேட்டால் பிரதமர் மோடி தான் மது விலக்கு அளிக்கவில்லை என்பார்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் மத்திய அரசை கைக்காட்டுவதே திமுகவின் வேலை. மது விலக்கு என்பது மாநில பட்டியலில் இருப்பது. அதைக் கூட திமுக தேசிய அரசியலாக்க நினைக்கிறது. பாமக தேர்தலில் வெற்றி பெற்றால் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும். மதுவை அறவே ஒழிக்கும்” என்று அன்புமணி தெரிவித்தார்.

மேலும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் பணிக்காக தங்கி இருந்த அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக தேசிய நெடுஞ்சாலையின் வழியே சென்னையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும் இடைத்தேர்தல் பணிக்காக விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவாஜ் தலைமையில் 10 மாவட்டங்களை சார்ந்த 2000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:விழுப்புரம் மாவட்டத்தில் 60,000 பேருக்கு தான் மகளிர் உரிமைத்தொகை" - உதயநிதி பேச்சை சுட்டிக்காட்டி அன்புமணி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details