தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது, "மத்திய அரசின் சீரிய முயற்சி காரணமாக, அதிகரித்து வரும் இந்த இணைப்பு, தமிழ்நாட்டில் வாழ்க்கை வாழ்வதில் சுலபத்தன்மையை அதிகரித்து வருகிறது.
நான் இங்கே உரையாற்றுவது, இங்கே தெரிவிக்கும் கருத்துக்கள் யாவும், ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தமோ அல்லது என்னோடு தனிப்பட்ட சித்தாந்தமோ, கோட்பாடோ கிடையாது. இது வளர்ச்சி முன்னேற்றத்திற்கான கோட்பாடு. நான் இங்கே இதைக் கூறும்போது தமிழ்நாட்டிலே இருக்கும் செய்தித்தாள்கள் இதை பிரசுரிக்க மாட்டார்கள். ஏனென்றால், அதனை தமிழக அரசு பிரசுரிக்க விடாது.
ஆனாலும் கூட, இந்த தடைகளைத் தாண்டி தமிழகத்தின் வளர்ச்சி திட்டத்தை, வளர்ச்சி பயணத்தை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும். நீர் வழிகள் மற்றும் கடல் வழி வாணிபத் துறையை, பல தசாப்தங்களோடு எதிர்பார்த்துத் தொடர்ந்து நோக்கி வந்திருக்கிறது.
ஆனால் பல எதிர்பார்ப்புகளைத் தாங்கி கொண்டிருந்த துறைகள்தான் இன்று வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரம் ஆகி வருகின்றன. தமிழ்நாட்டிற்கு இதனால் மிகப்பெரிய ஆதாயம் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டின் வசம் 3 பெரிய துறைமுகங்கள் இருக்கின்றன. 1 டஜனுக்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் இருக்கின்றன.
நமது தென்னாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாநில கரையோரப் பகுதிகளும் எல்லையில்லா சாத்தியக்கூறுகள் நிறைந்தவையாக இருக்கின்றன. கடல் வாணிபத்துறை மற்றும் நீர்வழித்துறை ஆகியவற்றின் மேம்பாடு என்பதற்கான நேரடியான பொருள் என்ன தெரியுமா? தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் வளர்ச்சி, கடந்த 1 தசாப்தத்தில் மட்டும் வ.உ.சி துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்த துறைமுகம் 38 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதன் ஆண்டு வளர்ச்சி வீதம் கிட்டதட்ட 11 சதவீதம் இருந்துள்ளது. இதனைப் போன்ற பலன்கள்தான், இன்று தேசத்தின் பிற பெரிய துறைமுகங்களிலும் கூட காண கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த வெற்றிகளின் பின்னணியில், பாரத அரசின் சாகர் மாலா போன்ற திட்டங்களுக்கும் பெரிய பங்களிப்பு அடங்கி இருக்கிறது. மத்திய அரசின் முயற்சி காரணமாக, கடல் வாணிபம் மற்றும் நீர்வழித் துறைகளில் இந்த பாரதம் பெரும் புகழ் ஈட்டி வருகிறது.