சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 04) மாலை நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடையில் சென்னை மக்களுக்கு வணக்கம் என பேசிய பிரதமர் மோடி, "ஒவ்வொரு முறை நான் சென்னைக்கு வரும்போதும் இங்கு உள்ள தமிழர்களால் எனக்கு ஒரு சக்தி உண்டாவதுடன், உழைப்பும் துடிப்பும் நிரம்பி இருக்கும் இந்த சென்னை நகருக்கு வருவது மிக இனிமையான அனுபவமாக உள்ளது.
ஆனால், இங்கே சில ஆண்டுகளாகவே நான் தமிழகம் வரும் பொழுது சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அதற்குக் காரணம், பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான். விரைவில் இந்தியாவை உலகின் மூன்று தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக ஆக்க வேண்டும். அதில் தமிழகத்தின் சென்னையின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும்.
ஒரு புறம் மத்திய அரசு தமிழகம் மற்றும் சென்னையின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. மறுபுறம் மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு சென்னை மக்களின் தேவைகளைக் கண்டு கொள்ளவே இல்லை. புயல் மற்றும் மழை வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளில் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
ஆனால், அவதிப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ள தடுப்பு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளாமல் ஊடக மேலாண்மையை அவர்கள் செய்து வந்தனர். ஊடகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, பாலும் தேனும் ஓடுவதாகவும் வெள்ள நீர் எங்கும் ஓடவில்லை எனவும் அவர்கள் பேட்டி அளித்து வந்தனர்.
மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றி வருகிறது. இதற்காகப் பல திட்டங்களுக்கான தொகையை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறது. இப்படி நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் சென்றடைவதால், லட்சக்கணக்கான கோடி ரூபாயைக் கொள்ளையடிக்க முடியாமல் இருக்கிறதே என்பதுதான் திமுகவிற்கு மிகப்பெரிய வருத்தம்" என்று அவர் திமுகவை சாடினார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "திமுகவிற்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தைக் கொள்ளை அடிக்க விடமாட்டேன். எந்த பணத்தை நீங்கள் கொள்ளை அடித்தீர்களோ அந்த பணம் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும் இது மோடியின் உத்தரவாதம்.