திருப்பூர்:பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிப்.27ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் மோடி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர், 28ஆம் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கானத் திட்டப்பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.
அதேபோல், ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் - பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நிறைவு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.