தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு பிங்க் ஸ்குவாட் - சென்னை மெட்ரோவின் அசத்தல் திட்டம்! - Chennai metro

Chennai Metro: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட் (PINK SQUAD) எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 3:40 PM IST

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகப் பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட் (PINK SQUAD) என்னும் புதிய திட்டத்தைச் சென்னை, நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் சென்னை மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார். இதில் தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 பேர் அடங்கிய மகளிர் பாதுகாவலர்கள் குழுவானது மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் கூறுகையில், "சென்னை மெட்ரோ ரயிலில் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்காக, தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 மகளிர் பாதுகாவலர்கள் கொண்ட பிங்க் ஸ்குவாட் அமைக்கப்பட்டுள்ளது. ரோந்து பணிகளிலும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள ரயில் நிலையங்களிலும் மகளிர் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். பெண்களுக்கு எதிராகக் கூட்டத்தில் நடைபெற வாய்ப்புள்ள குற்றங்களைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.

மெட்ரோ ரயிலில் மகளிருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் 1860 425 1515 என்கிற சி.எம்.ஆர்.எல். உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், அவர்கள் மூலம் மகளிர் பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து மகளிருக்காகத் தனியாக ஒரு உதவி எண் சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வரை மெட்ரோவில் பெண் பயணிகளுக்குப் பிரச்சினை என பெரிய அளவில் புகார்கள் வரவில்லை என்றாலும், பாதுகாப்பாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த பிங்க் ஸ்குவாட் அமைக்கப்பட்டுள்ளது.

மகளிர் பாதுகாவலர்களுக்குச் சிறப்பான எந்த அதிகாரமும் இல்லையென்றாலும் அவர்கள் காவலர்களிடம் ஒப்படைப்பார்கள். மெட்ரோ நிறுவனத்தின் பிரதான பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு காவல்துறையும், மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழ்நாடு காவல்துறையின் கீழ் தனியார் பாதுகாவலர்கள் செயல்படுகின்றனர்.

சில இடங்களில் மெட்ரோ ரயில்கள் சிசிடிவி நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்து தேவையைப் பொறுத்து மகளிர் பாதுகாவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பெண்களின் பாதுகாவலர்கள் தொடர்பான எந்த புகார்களையும் தெரிவிக்கலாம். மெட்ரோ ரயில் நிலையத்தில் சிசிடிவி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகப் புகார்கள் குறைவாகவே உள்ளன. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்து மகளிர் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விவசாயிகள் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; மன்னிப்பு கோரிய விவசாய சங்கத்தினர்!

ABOUT THE AUTHOR

...view details