சென்னை: சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (23). இவர் மாநிலக் கல்லூரியில் பிஎச்டி வேதியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 4) மாலை ரேணுகாதேவி தன்னுடன் பயிலும் செனாய் நகரைச் சேர்ந்த தனது தோழி ஆர்த்தி (24) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார்.
லேடி வெலிங்டன் கல்லூரி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற கார் திடீரென இடதுபுறம் நிறுத்தியதால் பதற்றம் அடைந்த ரேணுகாதேவி வலது புறமாக திரும்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய ரேணுகாதேவி, இருசக்கர வாகனத்துடன் கீழே சாய்ந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆர்த்திக்கு தலையில் பலத்த காயமடைந்துள்ளது. இதனை அடுத்து, தலையில் காயமடைந்த ஆர்த்தியை, அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, காயங்களுடன் உயிர் தப்பிய கல்லூரி மாணவி ரேணுகாதேவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாம்பரத்தைச் சேர்ந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் மாடசாமி (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மீன் குட்டையில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு.. அரக்கோணத்தில் சோகம்!