சென்னை:முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலம், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி என்பவர், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் ரூ.30 லட்சம் பெற்றுள்ளார்.
ஆனால், உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்காததால், ரவீந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "நான் வெம்பக்கோட்டை பகுதியில் எலக்ட்ரானிக் கடையை நடத்தி வருகிறேன். அதிமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், வெம்பக்கோட்டையின் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் விஜயநல்லதம்பி என்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் ஆலோசித்து, எனது உறவினர் ஆனந்த் என்பவருக்கு ஆவினில் மேலாளர் பணி வாங்கி தருவதாகக் கூறி என்னிடமிருந்து ரூ.30 லட்சம், கடந்த 2020ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.
ஆனால், முறையாக வேலை வாங்கி தராததால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தேன். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயநல்லதம்பி பல்வேறு நபர்களிடமிருந்து 3 கோடி ரூபாய் வரை பெற்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கியதாக புகார் அளித்ததால், அதன் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை முன்ஜாமீன் கூட பெறவில்லை, அதேநேரம், கைது செய்யப்படவும் இல்லை. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “மனைவி வீட்டின் தனி அறையில் தூங்குவது கணவருக்கு வேதனையளிக்கும்” - சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்!