சேலம்: நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் அனைவரும் சமத்துவ பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், பெரியார் பல்கலைக்கழகத்திலும் சமத்துவ பொங்கல் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவை பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் புறக்கணித்துள்ளனர்.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான குற்றவியல் விசாரணையை உயர் நீதிமன்றம் விரைந்து நடத்துவதற்கு உத்தரவிட்டு உள்ளது.
ஊழல் காரணமாக முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை பணியிடைநீக்கம் செய்ய தமிழக அரசு இரண்டு முறை அறிவுறுத்தியும், துணைவேந்தர் அவரை பணியில் இருந்து விடுவிக்காததை கண்டித்து பணி நேரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த தொகுப்பூதியப் பணியாளர்கள் மீது விசாரணை குழுவை அமைத்த துணை வேந்தருக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும், இன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக விசாரணை வளையத்திற்குள் உள்ள துணை வேந்தர் நிகழ்த்தும் சமத்துவப் பொங்கலை புறக்கணிக்க தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.