தமிழ்நாடு:ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அமாவாசை நாள் இந்துக்களின் முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் நீர்நிலைகளில் நீராடி தங்கள் குடும்பங்களில் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொள்வர். அந்த வகையில், ஆடி அமாவாசையான இன்று (ஆக.4) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி அதிகாலை முதலே வழிபாடு செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் வந்து, எள், அரிசி மாவு உள்ளிட்டவற்றைக் கொண்டு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதையொட்டி, அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாபநாசம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை:அதேபோல், புகழ்பெற்ற மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜை செய்து, தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர். காவிரி நீர் திருப்பி விடப்படாததால், மயிலாடுதுறை காவிரியில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் செயற்கை முறையில் போர்வெல் மூலம் புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பக்தர்கள் புனித நீராடும் வகையில் பிரத்யேகமாக குழாய் மூலம் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் வழக்கத்தை விட குறைந்த அளவே பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் காணப்படுகிறது.
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை முதலே மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.