தேனி:கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதிக்குள் இருக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது சாலையோரம் உலா வருவதும், அதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து, சிலர்புகைப்படமும் எடுப்பது வழக்கம்.
படையப்பா யானையைக் கண்டு மக்கள் பயந்து ஓடும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) குறிப்பாக, மூணார் வனப்பகுதியில் 'படையப்பா' என்றழைக்கப்படும் காட்டு யானை பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள், நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகள் உள்ளிட்ட இடங்களுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவத சமீபகால நிக்ழ்வாக உள்ளது.
அப்படியொரு சம்பவம் தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது. மூணாறிலிருந்து கல்லாறு நோக்கி மக்கள் தங்கள் கார்களில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வந்த படையப்பா யானையை கண்டு மக்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர், மக்கள் தங்களின் வாகனங்களை பின்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் குறுகிய சாலை என்பதால் அதில் சிரமம் ஏற்பட்டது.
பின்னர், படையப்பா யானை வாகனங்களை நோக்கி வருவதைக் கண்ட மக்கள் அலறியடித்து தப்பி ஓடினர். யானையைக் கண்டு மக்கள் அலறிடித்தபடி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, யானை தாமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதை அடுத்து மக்கள் தங்களது வாகனங்களை எடுத்துச் சென்றனர்.
முன்னதாக, உணவு தேடி ஊருக்குள் புகுந்த படையப்பா யானை, காய்கறிக் கழிவுகளுடன் அருகில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து சாப்பிட்ட காட்சிகள் வைரலானதை அடுத்து, இதுகுறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் வனப்பகுதியில் இருந்து படையப்பா யானை வெளியே வந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் படையப்பா யானை.. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!