தஞ்சாவூர்: தொடர் கனமழை காரணமாக, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளையப்பேட்டை ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை வைத்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும், டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூரில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வடிகால் வசதி முறையாக பராமரிக்கப்படாததால், மழைநீர் வடிய வழியின்றி பல்வேறு பகுதிகளில் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் மழைத்தண்ணீர் புகுந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சாகுபடி பயிர்களும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஒவ்வொரு மழைக்கும் இத்தகைய அவஸ்தையை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பெய்த தொடர் கனமழை காரணமாக, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளையப்பேட்டை ஊராட்சி 2வது வட்டத்தில் அமைந்துள்ள விகேஎஸ் நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. மழைநீரை அப்புறப்படுத்த ஊராட்சி மன்ற நிர்வாகம், மோட்டார் பம்புசெட் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்ட போதும், மழைநீர் முழுவதுமாக வடியவில்லை என கூறப்படுகிறது.