தென்காசி:பாவூர்சத்திரம் வழியாக நூற்றாண்டுகளாக இயங்கி வந்த திருநெல்வேலி - கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், தெற்கு ரயில்வே மற்றும் தென்காசி எம்பியைக் கண்டித்தும் கண்டன போஸ்டர்கள் பாவூர்சத்திரம் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
நூற்றாண்டு பெருமை கொண்ட திருநெல்வேலி - தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடத்தில் மீட்டர்கேஜ் காலத்தில் பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு இரண்டு தினசரி ரயில்களும், திருநெல்வேலி - கொல்லம் இடையே 3 ஜோடி பயணிகள் ரயில்களும் இயங்கி வந்தன.
திருநெல்வேலியிலிருந்து பாவூர்சத்திரம் வழியாக கொல்லத்திற்கு நேரடி ரயில்கள் 1904ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை ஏறத்தாழ 102 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக 2006ம் ஆண்டு புனலூர் - கொல்லம் இடையே ரயில்கள் நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து 2010ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கியது.
திருநெல்வேலி - செங்கோட்டை இடையே 2008ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பின் 2012ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கியது. செங்கோட்டை - புனலூர் இடையே 2010ம் ஆண்டு ஜூன் - ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பின், அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த பின் 2018ல் பயன்பாட்டுக்கு வந்தது.
திருநெல்வேலி - பாவூர்சத்திரம் வழியாக கொல்லம் வரை 2018ம் ஆண்டு அகல ரயில் பாதை பணிகள் 100% நிறைவடைந்தன. ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் திருநெல்வேலி - கொல்லம் இடையே பகல் நேர ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஆர்வம் காட்டவில்லை.
ஒட்டப்பட்ட சுவரொட்டி (ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள், ரயில் பயணிகள் சங்கங்கள், பொதுமக்கள் என யார் புகாரளித்தாலும், தெற்கு ரயில்வே சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பில், தெற்கு ரயில்வே மற்றும் தென்காசி எம்.பியைக் கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சார்ந்த வேல்முருகன் கூறுகையில், "பாவூர்சத்திரம் வழியாக திருநெல்வேலி - கொல்லம் பகல் நேர பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத தெற்கு ரயில்வேயையும், தென்காசி எம்பியையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி நடத்த இருக்கிறோம். அதற்குள் பாவூர்சத்திரம் வழியாக திருநெல்வேலி - கொல்லம் நேரடி ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நல்ல செய்தியை எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.