தஞ்சாவூர்:கும்பகோணம் ஊராட்சி ஒன்றியதுக்கு உட்பட்டது ஏராகரம் ஊராட்சி. இதன் தலைவராக வரலட்சுமி ரமேஷ் (திமுக) இருந்து வருகிறார். இந்த ஊராட்சிக்குட்பட்ட 8 மற்றும் 9வது வட்டங்களில் உள்ள பட்டக்கால் தெரு, நடுத்தெரு, தங்கையா நகர், மேட்டுத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்த்து மொத்தம் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளுக்கு 8வது வட்ட பட்டக்கால் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. அரசு விதிமுறைகளின் படி, ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டியில் மாதம் ஒரு நாள் தூய்மைப்பணி நடைபெற வேண்டும். மேலும் தூய்மைப் பணிக்குப் பிறகு மீண்டும் தூய்மை செய்ய வேண்டிய தேதியும் அந்த தொட்டியிலேயே குறிப்பிடப்படுவது வழக்கம்.
ஆனால் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த குடிநீர்த் தொட்டி சீரமைக்கப்பட்டதற்குப் பிறகு, இதுவரை சுத்தம் செய்யப்படவே இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தொட்டிக்குரிய தூண்களில் ஒன்று, கடந்த 2 ஆண்டுகளாக பலமாக சிதலமடைந்து பலமற்று நிலையில் உள்ளது.
மேலும் இந்தத் தொட்டி அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகேயே அசூர் புறவழிச்சாலை அமைந்துள்ளது. நாள்தோறும் எண்ணற்ற கனரக வாகங்கள் இந்தப் பகுதியைக் கடந்துச் செல்வதனால் ஏற்படும் அதிர்ச்சியில், இந்த கான்கிரீட் தூண் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் நிறைந்து காணப்படுகிறது.