தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம்: 2 பேர் உயிரிழப்பு - அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை! - PALLAVARAM WATER ISSUE

கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் உயிரிழந்ததாகக் கூறப்படும் மோகனரங்கன் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கழிவுநீர் பிரச்னை - கோப்புப் படம்
கழிவுநீர் பிரச்னை - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2024, 4:00 PM IST

சென்னை:தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து 2 நபர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ள உறவினர்கள், தற்போது வரை நேரடியாக அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிட்டு குறைகளைக் கேட்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகர் மலைமேடு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு 35க்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இரண்டு பேர் உயிரிழப்பு:

பல்லாவரம் பகுதியில் குடிநீர் வரும் குழாய் (ETV Bharat Tamil Nadu)

அதில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகனரங்கன் (42) என்பவருக்கு நேற்று அதிகாலை மீண்டும் வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால், மீண்டும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும், மாங்காடு பகுதியிலிருந்து உறவினர் வீட்டிற்கு வந்த திருவேதி (56) என்பவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த நபர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், இருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உறுப்பு மாற்று சிகிச்சையில் முதலிடம்: அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர் பகிர்ந்த தகவல்கள்!

இந்நிலையில், உயிரிழந்த மோகனரங்கனின் பல்லாவரம் மலைமேடு பகுதியில் நிலவரம் குறித்து அறிய ஈடிவி பாரத் தமிழ் ஊடக நிருபர் சென்றிருந்தார். அப்போது, உயிரிழந்த மோகனரங்கனின் உறவினர் நெடுஞ்செழியன் என்ற நபர் மற்றும் உறவினர்கள் ஈடிவி பாரத்திற்குப் பிரத்தியேக பேட்டி அளித்தனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை:

பல்லாவரம் பகுதியில் வரும் குடிநீரை காட்டும் பெண் (ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய நெடுஞ்செழியன், "நான் உயிரிழந்த மோகனரங்கனுக்கு 2 பிள்ளைகள் உள்ளன. குழாயில் வந்த குடிநீர் குடித்ததால் தான் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். ஆட்டோ டிங்கரிங் பணி செய்து வருகிறார். அவருக்கு குடிப்பழக்கம் எதுவும் இல்லை, அவர் உணவு அருந்தியதன் மூலம் எந்த உபாதைகளும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த தண்ணியை குடித்தவுடன் சிறிது நேரத்தில் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்பு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஆனால், அவருக்கு மீண்டும் ஒரு உடல் உபாதை ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் வீட்டில் அனைவரும் கேன் வாட்டர் பயன்படுத்தி வருகின்றனர். இவர் சிறுவயதிலிருந்து அவர்கள் பகுதியில் வரும் குழாய் நீரைக் குடித்து வருகிறார். உயிரிழந்த மோகனரங்கன் வீட்டில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு ஏதாவது வழங்க வேண்டும்" என வேதனையுடன் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்து அரசு பதில் சொல்லுமா?:

மேலும், அதேபகுதியைச் சேர்ந்த ஜீராணி என்பவர் கூறும்போது, "எங்கள் பகுதியில் வந்த குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறுகின்றனர். தற்போது அதிகாரிகள் தண்ணீரைச் சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் இந்த தண்ணீரால் உயிர் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்.

எங்கள் பகுதியில் மோகனரங்கன் ஒருவருக்கு மட்டும் உடல் உபாதை ஏற்பட்டு இருந்திருந்தால் பரவாயில்லை, எங்கள் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மக்கள் உடல் உபாதைகள் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது உயிரிழந்த மோகனரங்கன் குடும்பத்திற்கு அரசு பதில் சொல்லுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதுவரை எந்த அதிகாரிகளும் வரவில்லை:

உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து அதேபகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கூறுகையில், "எங்கள் பகுதியில் குழாயில் வந்த குடிநீரை குடித்த அதிகப்படியானோர் உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். எங்கள் பகுதிக்கு முறையாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.

இதையும் படிங்க:பல்லாவரம் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் விவகாரம்: பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டும், அமைச்சரின் விளக்கமும்!

இந்த பகுதியில் கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் எனத் கோரிக்கை வைத்த சாந்தி, இந்த பகுதிக்கு நேரடியாக அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிட்டு குறைகளைக் கேட்கவில்லை எனவும், காலையில் வந்து பிளிச்சிங் பவுடருக்கு பதிலாக வெறும் சுண்ணாம்பு பவுடரை வீசி சென்றதாகவும்" குற்றம் சாட்டினார்.

முன்னதாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிப்புக்குள்ளான மக்கள் குடித்த குடிநீரைப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும், முடிவுகள் வந்த பின்னரே காரணம் தெரிய வரும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details