சென்னை:பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 நாட்களே உள்ள நிலையில், புத்தாடை வாங்குவதற்காகவும், பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கும் தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற நாளை மறுநாள் ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்குவதற்கும், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள், கரும்பு ஆகியவற்றை வாங்குவதற்காகவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தியாகராஜ நகரில் முக்கிய கடை வீதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
திநகரில் களைக்கட்டிய பொங்கல் பர்ச்சேஸ் (ETV bharat Tamilnadu) அந்த வகையில், சென்னை தி-நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் புத்தாடைகளை வாங்கியும், மாம்பலம் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள மார்க்கெட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கியும் செல்கின்றனர். குறிப்பாக, பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களான பச்சரிசி, வெல்லம், மஞ்சள் கொத்து, கரும்பு ஆகிய பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர்.
காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
குறிப்பாக, தி-நகரில் இருக்கக்கூடிய ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை காட்டிலும் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் திருட்டு சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களை கண்காணிப்பதற்கு காவல்துறை சார்பில் ரங்கநாதன் தெருவில் மட்டும் 2 உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தி- நகரில் 2 உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துள்ள காவல்துறை (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:பொங்கல் பண்டிகை: தமிழ்நாடு முழுவதும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இது குறித்து வியாபாரி முருகேசன் பேசுகையில், "கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் கூட்டம் சற்று குறைவாகதான் உள்ளது. இன்று மாலை அதிக கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் அனைத்து பொருட்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய நாட்களில் தான் எங்களுடைய வருமானம், மற்ற நாட்களில் அவ்வாறு இருக்காது. இதில், மழை வந்து தொந்தரவு செய்கிறது. நாளை இன்னும் கூட்டம் அதிகமாக இருக்கும்" என்றார்.
தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் சேகர் கூறுகையில், "எப்போதும் இப்பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது மழை பெய்வதால் கொஞ்சம் குறைவாக உள்ளது. வெளியே எங்கு சென்றாலும் விலை அதிகமாக இருக்கும். ஆனால், தியாகராய நகரில் எங்களுக்கு ஏற்ற விலையில் பொருட்களை வாங்க முடியும்.
மழை பெய்வதால் அனைவருக்குமே சிரமமாகத்தான் இருக்கிறது. சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியவில்லை என்றாலும், இங்கு சிறியதாக கொண்டாடுவோம் என்ற முயற்சிதான் செய்து வருகிரோம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.