ஈரோடு:கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயில் சதமடித்து வருகிறது. குறிப்பாக, ஈரோட்டில் தான் அதிகளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. குளம், குட்டைகளில் நீர் வறண்டு காணப்படுவதுடன் மரம், செடி கொடிகள் காய்ந்து காணப்படுகின்றன.
கடும் வெப்பத்தால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மலைக்கிராமங்களில் அதிகளவில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நீர் இல்லாமல் மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில், வறண்ட மானாவாரி நிலங்களில் விவசாய, செய்ய முடியாமல் தரிசாக கிடக்கும் கேர்மாளம் கிராமத்தில் தண்ணீர் குறைந்தளவே கிடைக்கிறது.
சுமார் 200 குடும்பங்கள் உள்ள திங்களூர் ஊராட்சி, கேர்மாளத்தில் 2 போர்வெல் பழுதடைந்த நிலையில், ஒரே ஒரு போர்வெல் பைப்பில் மட்டுமே தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.