மதுரை: சபரிமலை ஐயப்ப சீஸன் துவங்கியுள்ள நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலைக்கு வரத்தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து, ஐயப்பனை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் 'சுவாமி சாட்போட்' (Swami Chatbot) எனும் டிஜிட்டல் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் இந்த டிஜிட்டல் உதவி மையம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், கோயில் திறக்கும் நேரம், பிரசாதம் கிடைக்கும் நேரம் மற்றும் பூஜை அட்டவணைகள் போன்ற முக்கியமான தகவல்களை இந்த 'சுவாமி சாட்போட்' டிஜிட்டல் உதவி மையம் மூலம் பெறலாம். இதன் மூலம் தங்களது ஆன்மீக பயணத்தையும் திட்டமிட முடியும் என பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, அருகிலுள்ள கோவில்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லும் வழிகளைக் கூறி பக்தர்களுக்குப் பேருதவி புரிகிறது. மேலும், விபத்துகள் மற்றும் அவசர சூழல்கள் குறித்த சாத்தியக்கூறுகளையும் தெரியப்படுத்துகின்ற காரணத்தால், பக்தர்களின் பாதுகாப்புக் கருவியாகவும் திகழ்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இவற்றை தவிர காவல்துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவி, வன அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால ஹாட்லைன் வசதிகளையும் வழங்குகிறது. எதிர்பாரா சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதற்குரிய தீர்வுகளையும், உதவிகளையும் வழங்கும் வகையில் 'சுவாமி சாட்போட்' உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமி சாட்போட் வாட்ஸ்அப் எண் (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்!
இதுகுறித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன், தொலைப்பேசி வாயிலாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "தடையற்ற, மகிழ்ச்சியான ஆன்மீக அனுபவத்தை சபரிமலைக்கு வருகின்ற ஒவ்வொரு பக்தரும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் 'சுவாமி சாட்போட்' கடந்த நவம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த பத்து நாட்களுக்குள் 75 ஆயிரம் பேர் இதன் மூலமாக பயனடைந்துள்ளனர். மேலும், நாள்தோறும் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பேர் தங்களது தரிசன சுற்றுலாவுக்கான தகவல்களைப் பெறுகின்றனர். உணவுத் தேவை, கோவில் நடை திறப்பு மற்றும் நடை சாத்துதல் நேரம், பேருந்து கால அட்டவணை, அவசரகால உதவிகள் உள்ளிட்ட தகவல்களை 'சுவாமி சாட்போட்' மூலம் அதிகமாகப் பெறுகின்றனர். இதுவரை 1,766 அவசரகால தேவைகள் குறித்த தகவல்கள் அதில் கேட்கப்பட்டுள்ளன.
இதுமட்டும் அல்லாது, மருத்துவ சேவைகள் குறித்து அதிகமானோர் கேட்டு அறிந்துள்ளனர். மேலும், தரிசனத்திற்காக குடும்பத்தாருடனோ அல்லது தணியாகவோ வந்த நபர்கள் காணாமல் போய் திரும்பவும் இந்த 'சுவாமி சாட்போட்' டிஜிட்டல் உதவி மையம் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர்த்து மழை, வெயில் போன்ற பருவநிலை மாற்றங்கள் மற்றும் சீதோஷ்ண நிலைகள் குறித்த தகவல்கள் கூடுதலாக ஓரிரு நாட்களில் 'சுவாமி சாட்போட்'-டில் இணைக்கப்பட உள்ளது. நிகழ் நேரத் தகவல்களும் இனி இடம் பெறும். இதனைப் பெறுவதற்கு 6238008000 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் 'ஹாய்' என குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். உங்களது செல்பேசியில் 'சுவாமி சாட்போட்' டிஜிட்டல் உதவி மையம் செயல்படத் துவங்கும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்