திருச்சி 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்! திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சி சிறுகனூரில் இன்று (ஜன.26) நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி என பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
திருச்சியில் விசிக சார்பில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜாதி, மதம் மற்றும் பாலின மேலாதிக்கத்தை எதிர்த்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும், சமத்துவத்தை நிலைநாட்ட வாழ் நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் இன அழித்தொழிப்பு போர் நடத்தி வரும் இஸ்ரேல் அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலைத் திறந்து, அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூரில் பா.ஜ.க அரசு ஆதரவோடு நடத்தப்படும் இன அழித்தொழிப்பு நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாலும், மாசுபாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால், சென்னையை இரண்டாவது தலைநகராக அறிவித்து, உச்ச நீதிமன்ற கிளை மற்றும் நாடாளுமன்ற கட்டடம் நிறுவ வேண்டும். 2021ல் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தி வைத்துள்ள பா.ஜ.க அரசு, மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்காக அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவைக் கலைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டு இயந்திரத்தோடு இணைக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதுமாக தொகுதி மறு சீரமைப்பில், தென் மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வர வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில், சமூக நீதியைப் பின்பற்ற வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகளை, மாநில அரசுகளே நியமனம் செய்ய வேண்டும். அதற்கான சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக, தமிழை அறிவிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., வரி விதிப்பைத் திரும்பப் பெற வேண்டும். மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும். ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் வரை, ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதைக் கைவிட வேண்டும்.
மாநில அரசின் சட்டம் – ஒழுங்கு நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும். தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அமைச்சரவை மற்றும் மேலவையில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:குடியரசு தினத்தில் 16 வயது சிறுவனுக்கு வீரதீர செயலுக்கான முதலமைச்சர் விருது.. யார் இந்த நெல்லை டேனியல் செல்வசிங்?