சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் வருகை தரும் பயணிகள் வெளியில் வந்து தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்கப் பாய்ண்டில் நின்று வாடகை கார்களில் ஏறி செல்வர். கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றிலிருந்து திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊழியர்களிடையே வாக்குவாதம் (Credits - ETV Bharat Tamil Nadu) அதன்படி, விமானங்களில் இருந்து இறங்கி வெளியில் வரும் பயணிகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மல்டி லெவல் கார் பார்க்கிங் எனப்படும் அடுக்குமாடி கார் பார்க்கிங்கிற்கு சென்று தான் வாகனங்களில் ஏறி செல்ல வேண்டும்.
அவ்வாறு பயணிகள் செல்வதற்கு இலவச பேட்டரி வாகனங்களை இந்திய விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், இந்த பேட்டரி வாகனங்கள் போதுமான அளவு இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி பேட்டரி வாகனங்கள் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டடத்தின் தரைப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் லிப்ட்கள் மூலம் மல்டி லெவல் கார் பார்க்கிங் இரண்டாவது தளம், மூன்றாவது தளம் சென்று வாகனங்களில் ஏறி செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும், மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் மூன்று லிப்ட்கள் உள்ளன. ஒவ்வொரு லிப்டிலும் மூன்று அல்லது நான்கு பயணிகள் லக்கேஜ் களுடன் ஏறியதும் லிப்ட் ஓவர் லோடு ஆகிவிடுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, "மல்டி லெவல் கார் பார்க்கிங் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியில் இருந்து தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்துவிட்டோம். எனவே, இந்த பிக்கப் பாயிண்டுகளும் அவர்கள் தான் நிர்வகிக்கின்றனர். இதையடுத்து தனியார் ஒப்பந்ததாரர்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப இந்த மாற்றத்தை செய்திருக்கின்றனர். இதற்கும் சென்னை விமான நிலைய நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றனர்.
அதோடு இன்னும் இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வரவில்லை. இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். அவ்வாறு முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்" என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தின் உள் பகுதியில் ப்ரீபெய்ட் (pre-paid) டாக்ஸியில் பயணிக்க பணம் கட்டிவிட்டு அவர்கள் கொடுக்கும் ரசீதுகளுடன் வெளியில் வந்து அலைந்து சென்று டாக்ஸிகளை தேடும் நிலை ஏற்படுகிறது.
ப்ரீபெய்ட் டாக்ஸிகள் மல்டி லெவல் கார் பார்க்கிங்கின் 2, 3 தளத்திற்கு சென்று பயணிகளை ஏற்றி வெளியே செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகுவதால் தனியார் பார்க்கிங் ஊழியர்களுடன் டாக்ஸி டிரைவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:போதைப்பொருள் விற்ற பணத்தில் கோடிக்கணக்கில் முதலீடு; ஜாபர் சாதிக்கின் மனைவி குறித்து அமலாக்கத் துறை பகீர் தகவல்! - jaffer sadiq case