தூத்துக்குடி:தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர், ரயில்வேத் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் இன்று (ஆகஸ்ட் 2) காலை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனத்தை முடித்து விட்டு காலை 11 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்போது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளுக்கும் 40 ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேருந்தில் ஏறிய மணிகண்டன் தூத்துக்குடி ஸ்பிக் பகுதியில் இறங்க வேண்டும் என்று நடத்துநரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
ஆனால், நடத்துநரோ இந்த பேருந்து அங்கெல்லாம் நிற்காது. நீங்கள் வேண்டும் என்றால் மதுரைக்கு 180 ரூபாய் டிக்கெட் எடுத்து தூத்துக்குடியில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, மணிகண்டனுக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.