கோயம்புத்தூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (பிப்.5) காலை நடக்க இருப்பதால், டெல்லி செல்வதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இயக்கத்தின் பணிகள், தேர்தல் வியூகம், குறிப்பாக இயக்கத்தின் கூட்டணிகள் குறித்து ஆலோசனை செய்யப்படும்.
செயற்குழு கூட்டத்திற்குப் பின்பு, செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளின்படி நான்கைந்து நாட்களில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து வெளிவரும். பாஜகவில் கட்சி சம்பந்தமாக தேர்தல் சம்பந்தமாக, கூட்டணி சம்பந்தமாக இந்தியா முழுவதும் பேசுவதற்கு அக்கட்சியின் பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள்.
பல மாநிலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்து, அதன் அடிப்படையில் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதை நினைவு கூற விரும்புகிறேன். எனவே, பாஜகவிற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல், எந்த மாநிலத்திலும் கூட்டணிக்காக பேசுவதற்கு தயவும் இல்லை, அவசியமும் இல்லை என்பது என்னுடைய கருத்து.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், கூட்டணி தலைவர்களை ஒத்த கருத்தோடு தேர்தலில் நின்று அதன் அடிப்படையில், கட்சிகளோடு நட்பு கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால், தலைவர்களைச் சந்தித்து நாட்டு நலன், மக்கள் நலன் குறித்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.