தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் பள்ளி ஆய்வகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்; நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே காரணம் என பெற்றோர் புகார்! - மானூர் உயர்நிலைப் பள்ளி

Tirunelveli school student issue: திருநெல்வேலி, மானூர் அருகே உயர்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் ஆசிட் பாட்டில் உடைந்து மாணவியின் கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மாணவியின் பெற்றோர் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் த்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
மாணவியின் பெற்றோர் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 4:19 PM IST

வகுப்பறையாக மாறிய ஆய்வகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்; நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே காரணம்; பெற்றோர் புகார்!

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள சத்திரம் குடியிருப்பு பகுதியில் இருபாலர் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளியின் ஆய்வகங்களும் வகுப்பறைகளாக செயல்படுவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையாக செயல்பட்ட ஆய்வகத்தை மாணவிகள் பூட்டியபோது, அங்கிருந்த ஆசிட் பாட்டில் உடைந்து, மாணவி ஒருவரின் கண்ணில் பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சக மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்து, அந்த மாணவியை திருநெல்வேலியில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர் நலமாக இருக்கிறார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை பாலமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில், தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், “பள்ளியில் ஆய்வகத்தில் வைத்து வகுப்பு நடத்தப்பட்டதன் காரணமாகவே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது, பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவும், மெத்தனமான போக்குமே இந்த பிரச்னைக்கு காரணம்” என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் பாதிப்பை உணர்ந்து கொள்ளாமல், பணம் கொடுத்து இந்த பிரச்னையை சரி செய்து முடிக்க முயற்சி எடுத்து வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் தலையிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், “பள்ளியின் இடப் பற்றாக்குறை காரணமாகவே ஆய்வகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டதால், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சைக்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வதுடன், 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் அரசு சார்பில் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவிகளுக்கு இது போன்ற பாதிப்புகளும், பிரச்னைகளும் ஏற்படாத வண்ணம், கண்காணிப்புக் குழுக்களை பள்ளிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்களையும் பொருத்தி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மனு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சங்கரன்கோவில் நகர் மன்ற கூட்டம்; மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

ABOUT THE AUTHOR

...view details