சென்னை:தமிழ்நாட்டில் சிறார் ஆபாசப் படங்கள் வைத்திருப்பவர்கள், பிறரிடம் பகிர்ந்து கொள்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிகமாக சிறார் ஆபாசப்படங்கள் பகிரப்பட்டு குழந்தைகள் மீதான கொடுங்குற்றச் செயல்களுக்கு காரணமாக அமைவதாகவும், அதற்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மயிலாப்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் செல்போனில் சிறார் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பதாகவும், அதனை அவர் விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், உயரதிகாரிகள் உத்தரவின் படி விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, அவரது செல்போனை ஆய்வு செய்து பார்த்த போது, அதிலிருந்த வீடியோவைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, அந்த செல்போனில் ஏராளமாக சிறார்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும், அந்த வீடியோக்கள் பல செல்போனில் பதிவிடப்பட்டதாகவும் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்துள்ளது.
அதாவது, தனது 14 வயது மகளையே பாலியல் தொழிலுக்குள் தள்ளி, அதனை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து வைத்ததும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பணத்திற்காக விற்பனை செய்ததும் அம்பலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த செல்போனில் இருந்து யார்? யாருக்கெல்லாம் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது? சிறார் வீடியோக்களைப் பார்த்தவர்கள் யார்? மேலும் அந்த வீடியோக்களில் உள்ள மற்ற குழந்தைகள் யார்? என பலக் கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யார் என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.