திருநெல்வேலி:தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
வெப்பத்தால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்க மக்கள் நுங்கு, பதநீர், இளநீர், மோர் போன்ற நீராகாரங்களைப் பருகி வருகின்றனர். குறிப்பாக, நுங்கு, பதநீர் முழுக்க முழுக்க இயற்கையான குளிர்பானம் என்பதால் அவற்றிற்குத் தமிழகம் முழுவதும் மவுசு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் உள்படப் பல்வேறு மாவட்டங்களில் நுங்கு, பதநீர் கிடைத்தாலும் தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நுங்கு, பதநீர் சீசன் என்பதால் இங்கு அதிக அளவு கிடைக்கிறது. அந்தவகையில், தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கடையாலுருட்டி கிராமம், அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் நுங்கு, பதநீருக்குப் புகழ்பெற்ற பகுதியாக விளங்குகிறது.
இந்த பகுதியில் வாழும் மக்கள் பனைமரம் சார்ந்த தொழிலை நம்பியே வாழ்கின்றனர். இப்பகுதிகளில் அதிகளவில் நுங்கு, பதநீர் கிடைக்கும். தற்போது கோடைக் காலம் என்பதால் நுங்கு, பதநீர் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில், இங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு மட்டுமே அனுப்பி வந்தனர்.
சமீபகாலமாக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெரு நகரங்களில் நுங்கு தேவை அதிகரித்துள்ளதால் கடையாலுருட்டி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து நாள்தோறும் டன் கணக்கில் லாரிகளில் நுங்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இங்கிருந்து நாள்தோறும் சுமார் நான்கு லட்சம் நுங்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
வெளிநகரங்களுக்கு அனுப்பப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி போன்ற அண்டை மாவட்டங்களில் தற்போது நுங்குகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுங்குகளின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நுங்கு ஒன்று தலா ஐந்து ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்த ஆண்டு 2 மடங்காக விலை அதிகரித்து பத்து ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் சாலை ஓரம் விற்கப்படும் நுங்குவையும், பதநீரையும் பார்க்கும்போதே மனதில் ஒரு விதக் குளிர்ச்சி ஏற்படும். வழுவழு தன்மை கொண்ட நுங்குவை வாயில் சுவைக்கும் போது உடலில் ஒரு வித உற்சாகம் ஏற்படும்.
ஆனால் இந்த நுங்கு, பதநீர் அவ்வளவு எளிதில் நமக்கு வந்து சேர்வதில்லை. நுங்குவை மரத்திலிருந்து இறக்கப் பனைத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மரம் ஏறுகின்றனர். பனை மரத்தில் பொதுவாக கறுக்குகள் எனப்படும் முட்கள் நிறைந்த பகுதிகள் இருக்கும். பனை ஓலையின் காம்புகளிலும் இருபுறமும் கூர்மையான முட்கள் போன்ற பகுதி இருக்கும். கரடு, முரடான பனை மரத்தில் ஏறி பதநீர் எடுக்கத் தொழிலாளிகள் அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் கண் முளிக்க வேண்டும்.
பாலையிலிருந்து பதநீர் சொட்டு சொட்டாக வடியும் பாலைக்குக் கீழ் மண் பானையைக் கட்டி வைத்திருப்பார்கள். அதனுள் சுண்ணாம்பு தடவினால் தான் அது பதநீராக நமக்குக் கிடைக்கும். சுண்ணாம்பு தடவாவிட்டால் அது தடை செய்யப்பட்ட கள் ஆக மாறிவிடும். ஒரு மரத்தில் பதநீர் வடியக் குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் ஆகும். அந்த ஐந்து நாட்களும் பனைத் தொழிலாளிகள் நாள்தோறும் அதிகாலையில் மரத்தில் ஏறி பானையைப் பராமரிக்க வேண்டும்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, பதநீர் முழுமையாகக் கிடைக்கும். சில நேரம் கடைசிவரை பதநீர் வடியாமல் ஏமாற்றமும் மிஞ்சும். ஒரு மரத்தில் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் முதல் அதிகபட்சம் 15 லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என 2 வகை உண்டு. ஆண் பனையில் பதநீர் மட்டுமே கிடைக்கும் பெண் மரத்தில் பதநீர், நுங்கு இரண்டுமே கிடைக்கும்.