மதுரை:நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவையை பாராட்டி, மருத்துவமனையின் கெளரவத் தலைவா் மருத்துவா் ஜி.நாச்சியாருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மருத்துவமனையின் கெளரவத் தலைவா் ஜி.நாச்சியாா் செய்தியாளா்களிடம் பேசியதாவது, “சுகாதாரத் துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக ‘பத்ம ஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனி நபருக்காக வழங்கப்பட்ட விருது இல்லை. அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் என அனைவரின் சேவைக்கும் கிடைத்த விருதாகவே கருதுகிறேன். ஒட்டுமொத்தமான எங்களுடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விருது.
ஆரம்ப காலகட்டத்தில் 12 படுக்கைகளைக் கொண்டு கண் மருத்துவம் செய்து வந்த நிலையில், தற்போது தினமும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் தொடர்பான சிகிச்சை அளித்து வருகிறோம். ஒரு நாளைக்கு 5ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்து வருகிறோம். எங்களிடம் 450 கண் மருத்துவர்கள் மற்றும் 2 ஆயிரத்து 500 செவிலியர்கள் உள்ளனர்.