தேனி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணார் என்பது வனப்பகுதி நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. சாலையோரம் உலா வரும் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்வதும், புகைப்படம் எடுப்பதும் வழக்கமான செயலாகும்.
இந்நிலையில், மூணாறில் படையப்பா காட்டு யானை பொது இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், உணவுகளைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தும், நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளை சேதப்படுத்துவதும் வழக்கம்.
இந்த நிலையில், உணவு தேடி மூணார் அருகே உள்ள கல்லார் பகுதியில் குப்பைகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை தரம் பிரிக்கும் இடத்திற்கு வந்த படையப்பா யானை, அப்பகுதியில் தரம் பிரித்து வைக்கப்பட்டிந்த காய்கறிக் கழிவுகளுடன் அருகில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உணவாக எடுத்துக் கொண்டுள்ளது. தற்போது, இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.