ஈரோடு:சத்தியமங்கலம் அருகே உள்ள சானார்பதி கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (44). அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார். கடந்த 23ஆம் தேதி தனது சிமெண்ட் சீட் வீட்டின் மேற்கூரையை சரி செய்ய வீட்டின் மீது ஏறியபோது எதிர்பாராத விதமாக சிமெண்ட் சீட் உடைந்து கீழே விழுந்ததில், தனபாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நடத்துநர் தனபால் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் காட்சி (CREDIT - ETV Bharat TamilNadu) அவரது குடும்பத்தினர் காயமடைந்த தனபாலை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனபால் மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், மூளை சாவு அடைந்த தனபாலின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தனபாலின் மனைவி புவனேஸ்வரியிடம் ஒப்புதல் பெற்று மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மூளைச்சாவு அடைந்த தனபாலின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன. கல்லீரல், இருதயம், கண் விழித்திரை, சிறுநீரகம், கணையம் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புக்களில் தனபாலின் இருதயம், மருத்துவர் குழுவுடன் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல கல்லீரல், கண் விழித்திரை, சிறுநீரகம், கணையம் ஆகிய உடல் உறுப்புக்கள் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவ குழுவுடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
அதனைத் தொடர்ந்து உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட தனபாலின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசு சார்பில் கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தனபாலின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
பின்னர், அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் எரியூட்டப்பட்டது. மூளைச்சாவில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநர் தனபாலுக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.
இதையும் படிங்க: "நான் தாசில்தார், நீ பில் கலெக்டர்" அரசு வேலைக்கு பேரம் பேசியவர் கைது - MONEY CHEATING