அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தூத்துக்குடி:கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்லவத்தை நீக்கி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து, தொடர்ந்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் முறையிட்டும், எங்கும் அவருக்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை. மேலும், தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அவர் தொடர்ந்த வழக்கு தற்போதுவரை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அதிமுக மீதான உரிமையை விட்டுத்தர முடியாது என ஓபிஎஸ் தரப்பு ஒருபுறமும், அதிமுக கட்சி தங்களுக்கே என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தரப்பினர் மறுபுறமும் உரிமை கொண்டாடி வந்தனர். இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அதிமுக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தி வந்தனர்.
இதையடுத்து, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில், கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து, இடைக்கால தடைக்கான காலம் முடிவடைந்த நிலையில், தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், தீர்ப்பு வரும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டோம் என்றும் ஓபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதியும் இருதரப்பின் இறுதி வாதங்களைக் கேட்டறிந்தார். இந்த இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 18) வழக்கின் தீர்ப்பை நீதிபதி சதீஷ்குமார் பிறப்பிக்க உள்ளார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தி தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், இன்று தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா? அல்லது எடப்பாடிக்கா? என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், அதிமுக தரப்பில் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால், தீர்ப்பு சாதகமாக அமைய வேண்டி ஓ.பன்னீர்செல்வம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று (மார்ச் 18) விஸ்வரூப தரிசனம் செய்தார். மேலும், அபிஷேகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார்.
இதையும் படிங்க:"யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" - ஈ.பி.எஸ் அறிக்கைக்கு திமுக டி.ஆர்.பாலு பதிலடி