தேனி:முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஆனால், அது சுத்த பொய் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியைச் சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்-யின் 184-ஆவது பிறந்தநாள் இன்று (ஜன.15) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி (ETV Bharat Tamil Nadu) கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் (ஜன.15) இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபத்தில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பொங்கல் வைத்து ஜான் பென்னிகுவிக்கை வழிபட்டு, அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பென்னி குவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி (ETV Bharat Tamilnadu) அப்போது, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பென்னிகுவிக்கின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, "கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் தேனி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான நாள், ஐந்து மாவட்டம் செழிப்பாக இருக்கக் காரணமாக விளங்கியவர் ஜான் பென்னிகுவிக் என்றார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான் முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பினை பெற்றுத் தந்தார் என்றும், இரு மாநில உரிமை சம்பந்தப்பட்டது என்றும், முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் எனவும், அதுமட்டுமின்றி பேபி அணை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார் எனவும்" தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோவை வந்த இலங்கை அமைச்சர் - தொழிலதிபர்களுக்கு முன் வைத்த வேண்டுகோள்!
அதனைத் தொடர்ந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கர்னல் ஜான் பென்னிகுவிக் திருவுருவச்சிலைக்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பென்னி குவிக் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் (ETV Bharat Tamilnadu) பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்த போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்தினார். பின்னர், பேபி அணையை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்துவதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பை பெற்றுத் தந்தார்.
கர்னல் ஜான் பென்னிகுவிக்கை போற்றுவதற்காக அவருக்கு லோயர் கேம்ப் பகுதியில் மணிமண்டபமும் கட்டி நேரடியாக வந்து திறந்து வைத்தார். 2006-இல் ஜெயலலிதா தான் உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் என தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தீர்ப்பை பெற்றுத் தந்ததாக அமைச்சர் பெரியசாமி கூறிய கருத்து தவறானது" எனத் தெரிவித்தார்.