விதியை மீறி கட்டடங்கள் கட்டுவதாலே உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு நீலகிரி: உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமத்திற்கு உட்பட்ட லவ்டேல் காந்தி நகர் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான தடுப்புச் சுவர் கட்டும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, அப்பகுதியில் உயரமான கழிப்பிடக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் மண் சரிவு ஏற்பட்டு 13 நபர்கள் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், சுமார் 10 நபர்கள் முன்னதாக மீட்கப்பட்டனர். அதில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36), உமா (35), சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய 4 நபர்களும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் லவ்டேல் பகுதியில் விதி மறிய கட்டடங்கள் அதிக அளவில் கட்டப்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சார்ந்த ஜெயக்குமார் கூறுகையில், "காந்திநகர் பகுதியில் தனியார் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டபோது, பழைய கழிப்பிடம் இடிந்து விழுந்து ஆறுக்கும் மேற்பட்ட பெண்கள் மண்ணில் புதைத்து உயிரிழந்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் சிலர் புதைந்துள்ளதாக சந்தேகப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிக அளவு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். விதி மீறிய கட்டடங்கள் கட்டுவதை அதிகாரிகள் தடை செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பிய அப்பகுதி மக்கள், காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை.. அண்ணாமலை விளக்கம்!