கோயம்புத்தூர்:கோயம்புத்தூர்மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தாசம்பாளையம் பகுதி, தனியார் விவசாய நிலம் அருகில் மழை நீர் கசிவு குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் மழை காரணமாக சேறும் சகதியும் சேர்ந்து மழை நீருடன் தேங்கியிருந்துள்ளது. இந்நிலையில், அந்த குட்டையில் யானை ஒன்று உயிரிழந்து மிதந்து கொண்டிருப்பதைக் கண்ட ஊர்மக்கள், உடனடியாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர், யானையின் உடலை மீட்பதற்காக ஜேசிபி இயந்திரம் வரவழைத்து யானையின் உடலை மீட்டனர். இந்நிலையில் தான் உயிரிழந்த யானை பல ஆண்டுகளாக தாசம்பாளையம், ஓடந்துறை, கல்லார், சமயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் 30 வயதான மதிக்கத்தக்க ஆண் யானை ஊசிக்கொம்பன் என்பது தெரியவந்துள்ளது.