வேலூர்:சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் மரத்தை ஏற்றிச் சென்ற பொக்லைன் (JCB) வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து அரியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், வேலூர் மாவட்டம், ஊனை மேட்டூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரமேஷ். இவர் நேற்று (டிச.15) ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ஆவரம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதில், வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் பொக்லைன் வாகனம் ஈடுபட்டிருந்துள்ளது.
இந்த நிலையில், பொக்லைன் வாகனம் வெட்டிய மரங்களை ஓர் இடத்தில் போட சென்றுள்ளது. அப்போது, அவ்வழியாக வந்த வழக்கறிஞர் ரமேஷ், சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் பொக்லைன் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் ரமேஷ் உயிரிழந்துள்ளார்.