சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1,977 வன விலங்குகள் உள்ளன. இதனைப் பார்வையிடுவதற்காக இப்பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், கடந்த மாதம் கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இதற்கு மாற்றாக, வண்டலூரிலிருந்து ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு, 2 ஜோடி சருகுமான், 3 நெருப்புக்கோழி, ஒரு ஜோடி பச்சை உடும்பு, ஓர் ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவை கான்பூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டன. புதியதாக வருகை தந்த இந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிக் கூண்டுகளில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், குரங்குகளுக்கு உணவு வைக்கும்போது, 2 அனுமன் குரங்குகள் கூண்டிலிருந்து தப்பித்துக் காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பூங்காவிலிருந்து தப்பி ஓடிய அனுமன் குரங்குகளைப் பிடிப்பதற்கு வன அலுவலர்கள் பூங்கா ஊழியர்கள் குழு அமைக்கப்பட்டு நவீன மயக்க ஊசி துப்பாக்கி மூலம் குரங்குகளைப் பிடிப்பதற்குத் தீவிரமாகத் தேடி வந்தனர்.