சென்னை:கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கும் நிலையில், நாளை (ஜன. 25) முதல் ஆம்னி பேருந்துகள் அங்கிருந்து தான் இயக்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் கிளம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகள் செல்லும் போது ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து இயக்குவது சரியாக இருக்கும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அந்த சங்கத்தின் தலைவர் அன்பழகன், "ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது. இதில் 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த ஏதுவாக இடங்கள் உள்ளன. ஆனால் தினசரி நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1,600 வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்தில் நிறுத்தி இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை.
அடிப்படை வசதிகள்:கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் அரசால் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக பஸ் நிறுத்தும் இடம் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த இடம் வேலை முடிவதற்கும் சுமாராக ஆறு மாதம் காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.