சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா விதிகளை மீறி இயங்கும் 800 வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னிப் பேருந்துகளை தமிழ்நாடு பதிவிற்கு மாற்றும் வரையில் இயக்கும் எண்ணம் இல்லை என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் 'ரெட் பஸ்' போன்ற டிக்கெட் பதிவு செய்யும் செயலிகளில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் படுக்கை வசதிக் கொண்ட ஆம்னிப் பேருந்துகளை 2020 ஆம் ஆண்டு முதல் தான் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
''தற்போது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட பேருந்துகளாக மாற்றியது போக மீதமுள்ள பேருந்துகளையும் பதிவு செய்ய தயாராக தான் உள்ளோம். எஞ்சியுள்ள பேருந்துகளை பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளோம், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். ஒரு பேருந்தை பதிவு செய்ய ஒரு மாதம் வரை ஆகிறது.