ராமநாதபுரம்: நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனியை காட்டிலும் ஒரு லட்சத்து 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக ராமேஸ்வரம் வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து, பின்னர் ராமேஸ்வரம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக திருக்கோயிலின் நான்கு ரத வீதிகள் வழியாக திறந்த வாகனத்தில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடந்து முடிந்த ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக தனி சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறேன்.
மேலும், இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்ததாக கூறமாட்டேன். இந்தியாவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சி. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்ததாதல்தான் எனக்கு மக்கள் அதிக வாக்களித்தனர். எனவே, பிரதமருக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்தும் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதிமுக கட்சி தொண்டர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு 52 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. ஆனால், தற்போது அனைவரும் பிரிந்து இருப்பதால் அதிமுக தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது.