கரூர்: கரூர் நகரில் உள்ள தனியார் மகாலில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சார்பில் அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் கரூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று(ஜன.28) நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஓபிஎஸ்,"திராவிட இயக்கத்தின் நீட்சியாக உருவான அஇஅதிமுக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டபோது, கட்சியில் உள்ள அடிப்படை உறுப்பினர் ஒருவர் தான், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. இதை எந்த பொதுக்குழு கூட்டத்தாலும் மாற்றம் செய்திட முடியாது.
காரணம் அதிமுக என்னும் கட்சியில் சாதாரண தொண்டன் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பான பொதுச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என்ற வரலாற்று சிறப்புமிக்க விதியை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வகுத்துச் சென்றார்.
அதன் அடிப்படையில், தான் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்து தமிழக முதலமைச்சராக பதவி வகுத்து ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திச் சென்றார். பொதுச்செயலாளர் பதவிக்கான விதியை மாற்றம் செய்யவோ, திருத்தம் செய்யவோ முடியாது என்ற சரத்து அதிமுக கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தானாக பொதுச்செயலாளர் என்று மகுடம் சூட்டிக்கொண்டு, அதிமுகவின் முக்கிய விதியை காலில் போட்டு மிதித்துக் கொண்டு இருக்கிறார். இது அதிமுக தொண்டர்களுக்கான உரிமை. தொண்டர்களுக்காக வகுக்கப்பட்ட உரிமை. இந்த உரிமையை மீட்டெடுப்பதற்காக, தற்போது எனது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அஇஅதிமுக எனும் கட்சி தொண்டர்கள் உரிமை மீட்புகுழு.
அதிமுகவில் சாதாரண தொண்டன் மட்டும்தான் பொதுச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என்ற விதியை எடப்பாடி பழனிசாமி திருத்தி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக அதிமுகவில் நிர்வாகியாக பணியாற்றி உள்ள ஒரு நபரை, மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்து பொதுச்செயலாளராக தேர்வு செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி விதியை திருத்தி பொதுச்செயலாளர் பதவியை அபகரித்துள்ளார்.
சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளர் பதவியை அடைய முடியும் என்ற விதியின் அடிப்படையில் தான் ஒபிஎஸ், இபிஎஸ் என்ற இருவரும் தலைமை பொறுப்புக்கு வந்தார்கள். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அதிமுகவில் உள்ள ஒன்றைரை கோடி தொண்டர்கள் சேர்ந்து, எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவார்கள்.
அம்மாவின் மறைவுக்குப் பிறகு நிரந்தர பொதுச்செயலாளர் பதவி வழங்குவதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி கௌரவப்படுத்தப்பட்டது. ஏனென்றால் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக எனும் கட்சியை வழிநடத்தி அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக மாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா தான்.
அதற்காகத்தான் இந்த உச்ச பச்ச மரியாதையை வழங்கும் வகையில் நிரந்தர பொதுச்செயலாளர் எனும் பதவியை ஒரு மனதாக தேர்வு செய்து வழங்கினோம். அதன் அடிப்படையில் தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுகவில் உள்ள ஒன்றைரை கோடி தொண்டர்கள் ஒருமனதாக வாக்களித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கூட்டு தலைமை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இரண்டே வாரங்களில், அதிமுக ஒற்றை தலைமை அடிப்படையில் இயங்க வேண்டிய அவசியம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறி, சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என்று கூறி அதிமுகவின் சட்டதிட்ட விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டார்.